சென்னை: தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு, இன்று (ஏப்.20) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.

மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. நடப்பாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (ஏப்.20) தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வியின் இணையதளம் (rte.tnschools.gov.in) வழியாக பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும்சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம். இந்த திட்டத்தில், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.


வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள் ஆகியோரது விண்ணப்பங்கள் குலுக்கல் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

அதேபோல், நலிந்த பிரிவினர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும். ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், தனியார் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் ‘‘தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெறும். தேர்வான மற்றும் நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் மே 21-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.


ஒரு பள்ளியில் அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் மே 23-ம் தேதி குலுக்கல் முறையில் குழந்தைகளை தேர்வு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த சேர்க்கை முடிக்கப்பட்ட விவரங்களை மே 29-க்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم