தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிந்தது. இதையடுத்து, அவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தி, தேர்வு முடிவுகளை 27ம் தேதி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்தில் 2021-2022 ம் கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அதற்கான மதிப்பெண்கள் பதிவேட்டில் பதியப்பட்டு, தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளியின் தேர்வுக் குழுவால் 27ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், 28ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட தேர்ச்சிப் பதிவேடுகளை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ள மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
சென்னையில் இயங்கும் பள்ளிகளில் தென் சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப்பள்ளி, பசுல்லா ரோடு, தி.நகர், மத்திய சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேனிலைப் பள்ளி, சென்னை கிழக்கு கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழைய வண்ணாரப் பேட்டை பி.ஏ.கே பழனிச்சாமி மேனிலைப் பள்ளி, வட சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரம்பூர் லூர்து மேனிலைப் பள்ளி, மேற்கு கல்விமாவட்டத்தை சேர்ந்தவர்கள் புரசைவாக்கம் கேரளா வித்யாலயா மேனிலைப் பள்ளியிலும் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்று முதல் மாணவர்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவியருக்கு தேர்வுகள் மே 5ம் தேதி முதல் 13ம் தேதியான நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்போது நடக்கிறது. அவை 30ம் தேதியுடன் முடிகிறது. எனினும், பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 20ம் தேதியில் இருந்து பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்து இருந்தவர்கள், 20ம் தேதிக்கு முன்னரே பணிகளை முடித்தவர்கள் வர வேண்டியதில்லை. அடுத்த 2022-2023ம் கல்வி ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Post a Comment