மொழிப் பாடத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
9.51 லட்சம் மாணவர்கள்
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் மொழிப் பாடத்தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த 4,092 மையங்களில் 9.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். சென்னையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.
இதற்கிடையே, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசினர் ஹோபார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''2 ஆண்டுகள் கழித்து தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் தேர்வெழுதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய் யப்பட்டுள்ளன'' என்றார்.
மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற மொழிப்பாடத் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் உட்பட சில பிரிவு கேள்விகள் எதிர்பாராத பகுதியிலிருந்து கேட்கப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
விருப்பப் பாடத் தேர்வு மே 14-ம்தேதி நடைபெற உள்ளது. மே 30-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, ஜூன் 17-ல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
கைக்குட்டை அனுமதிக்கப்படுமா?
பெரும்பாலான தேர்வு அறைகளில் காற்றோட்ட வசதிகள் குறைவாக இருப்பதால், கோடை வெயில்தாக்கத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு அறைக்குள் கைக்குட்டை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
إرسال تعليق