கர்நாடகா மாநிலத்தில் திட்டமிட்டபடி மே 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் மாநிலத்தில் வெப்பநிலை உயரும் என்ற எவ்வித முன்னெச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை. மேலும் புதிய கல்வியாண்டை தொடங்குவதை தள்ளிவைக்கும்படி எவ்விதக் கோரிக்கையும் அரசுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா எதிரொலியாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக திறக்கப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் முறையில் தான் படித்து வந்தனர். இதனால் அவர்களின் நேரடி கல்விமுறை அதிகம் பாதிப்புக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு வகுப்புகள், ஆண்டு இறுதி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதை அடுத்து பல மாநிலங்களில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதன் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேட்டி ஒன்றில், கர்நாடகத்தில் உள்ள மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டால், எதிர்கால கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு கோடி கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்கிறது.
இதற்கிடையில் மாணவர்களின் கல்வி முறைகளை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இவரை தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் மாணவா்களின் கற்றல் நடைமுறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை குறைத்து, மே 16-ஆம் தேதி முதலே பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. திட்டமிட்டப்படி கோடை விடுமுறை முடிந்த பின்னர் மே 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அப்போது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
إرسال تعليق