சென்னை: பாடப்புத்தகத்தில் மத்திய அரசு பெயர், முதல்வர், ஆளுநர் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வியில் 1 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்டம் 2018-ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது அந்த பாடத்திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட உள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய அரசின் பெயரை 'ஒன்றிய அரசு' என்று மாற்றி அழைத்து வருகிறது.

அந்த நடைமுறையை பள்ளி பாடத்திலும் மாற்றம் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசு என்ற வார்த்தை 'ஒன்றிய அரசு' என்று பாடப்புத்தகங்களில் திருத்தப்பட உள்ளது. மேலும், 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெறுள்ள ஆளுநர், முதல்வரின் அதிகாரம் குறித்த தகவல்களையும் மாற்றுவதற்கு முடிவாகியுள்ளது.

இதுதவிர மொழி வாழ்த்து பாடல், செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக மறைந்த முதல்வர் கருணாநிதி எழுதிய பாடல் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட உள்ளது. இவை வரும் கல்வியாண்டில் வழங்கப்பட உள்ள புத்தகங்களில் இடம்பெற உள்ளன. இதன் விவரங்களை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.

Post a Comment

Previous Post Next Post