பெங்களூருவில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று கட்ட பரிசோதனை நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார்.
வரும் 21, 22 ஆம் தேதிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிய 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 435 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்தி 66 பேர் தேர்வு எழுத உள்ளனர். இது தொடர்பாக பெங்களூரு விதான் சவுதாவில் தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது: "தேர்வில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கும் வகையில் அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் பரிசோதனைக்கு பின் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பாக தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று கட்ட பரிசோதனை நடைபெற உள்ளதால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வர்கள் தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கொண்டு செல்வது, விடைத்தாள் கொண்டு வருவது என அனைத்திற்கும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படியே தேர்வு நடைபெறும். ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கட்டாயம் நடக்கும். இதில் எந்த முறைகேடும் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
إرسال تعليق