பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸின் முக்கிய பாடங்களைக் கற்பிக்கவும், கற்றல் தரத்தை மேம்படுத்தவும் இந்த போர்ட்டல் பயன்படும் என நம்புவதாக ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவின் டாப் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ், அனைவருக்கும் உயர் தரத்துடன் கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் கிடைக்கச் செய்யும் விதமாக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
ஐஐடி கணினி அறிவியல் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து, கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வமுடைய எவரும் அணுகும் வகையில் முக்கிய படிப்புகளைக் கொண்ட போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் கிராமப் பகுதிகளுக்கும் உயர்தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்ற சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் முயற்சியின் முக்கிய ஸ்டேப் இதுவாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை http://nsm.iitm.ac.in/cse/ என்ற போர்ட்டலின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. அதில், புரோகிராமிங் (Programming), டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), கம்ப்யூட்டர் ஆர்கனைசேஷன் (Computer Organisation), அல்காரிதம் (Algorithms) ஆகிய முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் மாணவர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொற்றுநோய் காலத்தில் சென்னை ஐஐடி மாணவர்களுக்காக ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் நடத்தப்பட்ட நேரடி விரிவுரைகளை யூடியூப்-பில் காண முடியும்.
இதுகுறித்து பேசிய ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை (CSE) தலைவர் பேராசிரியர் சி.சந்திரசேகர், இளங்கலை, பட்டதாரி நிலைகளில் உள்ள மாணவர்களுக்காக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர்கள் எடுத்த நேரடி வகுப்புகளின் பதிவுகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் அடிப்படைக் கருத்துகள் மற்றும் கொள்கைகளை சரியான முறையில் கற்றுக்கொள்ள முடியும்.
மேலும், கணினி அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் முக்கியமான மற்றும் அடிப்படை பாடங்களை எவ்வாறு திறம்பட கற்பிப்பது, சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்களிடம் கொண்டு வருவதற்கு பேராசிரியர்களுக்கு உதவியாக இருக்கும்.
பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸின் முக்கிய பாடங்களைக் கற்பிக்கவும், கற்றல் தரத்தை மேம்படுத்தவும் இந்த போர்ட்டல் பயன்படும் என நம்புவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் குறிப்பாக ஐ.ஐ.டி.க்களில் மிகவும் விரும்பப்படும் பொறியியல் துறைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முக்கியமான ஒன்றாகும். மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயில அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஐஐடி மெட்ராஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேர ஆசைப்பட்டாலும், குறைந்த அளவிலான இடங்கள் காரணமாக நிறைவேறாத ஆசையாக செல்கிறது.
ஐஐடி மெட்ராஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபேஷ் நஸ்ரே கூறுகையில், ஐஐடி மெட்ராஸில் படிக்க முடியாத மாணவர்களுக்காகவும், தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் உதவும் நோக்கில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் அதே பாடத் தொகுதிகள் அவர்களுக்கும் கிடைக்கும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான பாடத் தொகுப்புகள் கிடைக்கும் என்பதை இந்த முன்முயற்சி உறுதிசெய்யும் என தெரிவித்தார்.
மாணவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், நேரடி பயிற்சி அமர்வுகளை நடத்த மூத்த மாணவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல், போர்ட்டலில் கல்வி பயில்வோர், சுய மதிப்பீட்டிற்காக வினாடி வினா போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் படிப்பு குறித்த அவர்களின் புரிதலின் அளவையும் கண்டறியலாம்.
إرسال تعليق