ஒற்றை ஆசிரியர் உள்ள பள்ளியை மூட தமிழக அரசு விரும்பவில்லை என்றும், எனவே ஒரே ஒரு மாணவர் படித்தாலும்கூட அந்த பள்ளி இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில், உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், என்னை பொறுத்தவரை என்னுடைய மாணவர்களும் மாணவிகளும் தான் ராஜா ராணி ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் தான் நாட்டை ஆளப்போகிற ராஜா ராணிகள் என்றும், அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக தேர்வு நடத்துகிறோம் என்று கூறிய அமைச்சர், கத்திரி வெயில் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட முடியாது என்றும், கட்டாயம் தேர்வு என்பதே தனது நிலைபாடு என்றும், மாணவர்கள் நலன் கருத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஒற்றை ஆசிரியர் உள்ள பள்ளியை மூட தமிழக அரசு விரும்பவில்லை என்றும், எனவே ஒரு மாணவர் படித்தாலும் அந்த பள்ளி இயங்கும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment