தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும் குரூப்-4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இந்த தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார் இருபத்தி ஒரு லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவக்கூடிய வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருகின்ற 24 ஆம் தேதி இந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை பெற 044-24615160 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post a Comment