வரும் கல்வியாண்டில் 1-3 வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது.
நமது கல்விமுறை முழுமையும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். அதாவது, போட்டியின் அடிப்படையில் அல்லாமல், குழந்தைகளின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், அனுபவித்துக் கற்றுக்கொள்வதாக மாற வேண்டும். கற்றுக்கொண்டவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் வகையில் கல்வியின் குறிக்கோள் அமையவேண்டும். எனவே, குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை, ஆற்றலை உணரும் வகையில் பேசுதல், செயல்பாடுகள், கலை, கைவினைச் செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை. பாடல், கதை, வாசித்தல், பொம்மலாட்டம், படைப்பு மற்றும் பல செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கற்பித்தல் முறை தேவையாய் இருக்கிறது.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தை 2021இல் இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே 2022ஆம் ஆண்டிற்குள் நுழைகிறது. நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வருகையில் இந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை பள்ளி வகுப்பறையில் செய்ய வேண்டி இருக்கிறது. இணையவழி வகுப்புகள் நடந்திருந்தாலும், இணையம் மெதுவாக வேலை செய்யும் கிராமங்களில் பாடங்களை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தன. போலவே, ஸ்மார்ட் போன்கள் இல்லாத குடும்பங்களும் உண்டு. அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மற்ற குழந்தைகளுடையதைவிட அதிகம்.
இந்தத் தேவையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டில் 1-3 வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. வரும் 2022-23 கல்வியாண்டில் தொடங்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025-ல் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பது. அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். செயல்வழியிலும் விளையாட்டுவழியிலும் குழந்தைகள் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் அடிப்படை. குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்கவும் 'எண்ணும் எழுத்தும்' உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் 'எண்ணும் எழுத்தும்' தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்.
إرسال تعليق