சென்னை: 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 77.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்ற 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை, 3,166 மாணவர்கள், 3,507 மாணவியர்கள் என மொத்தம் 6,673 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,070 மாணவர்கள், 3,104 மாணவியர்கள் என மொத்தம் 5,174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 77.54 ஆகும்.
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில், வணிகவியல் பாடத்தில் 1, கணக்கு பதிவியல் பாடத்தில் 5 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 3 பேர் என மொத்தம் 9 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில், 14 பேர் 551க்கு மேல் மதிப்பெண்களும், 69 பேர் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 175 பேர் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.41 சதவீதத்துடன் முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.50 சதவீதத்துடன் 2ம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.81 சதவீதத்துடன் 3ம் இடத்தையும் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* புழல் சிறையில் 21 பேர் தேர்ச்சி
புழல் மத்திய சிறையில் 2 பெண் கைதிகள் உள்ளிட்ட 26 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில், 2 பெண் கைதிகள் உள்பட 21 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், புழல் சிறை கைதி ராஜேஷ் 516 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 11ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து சிறை கைதிகளுக்கும் தமிழக காவல்துறை இயக்குனர் சுனில்குமார் சிங், சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், புழல் சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன், சிறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment