திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி பள்ளிகளில் காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடக்கி வைக்கவிருக்கிறார்.பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق