வீடுகளில் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வரும் அனைவரும் வரும் 30-09-22-க்குள் ரூ.10,000 செலுத்தி (CGWA) மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் NOC பெற்றுக்கொள்ளவும் இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
விளக்கம்
வீடுகளில் உள்ள கிணறு, போர் தண்ணீரைப் பயன்படுத்த ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் நிலத்தடி நீர் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக நாளிதழில் வெளியான பொது அறிவிப்பின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

ஜூன் 29-ம் தேதி தினத்தந்தி நாளிதழில், ” மத்திய நிலத்தடி நீர் ஆணையம்(CGWA) ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட பொது அறிவிப்பு ” என்ற விளம்பரத்தில் இருந்தே சமூக வலைதளங்களில் இத்தகவல் பரவத் தொடங்கியது.


CGWA வெளியிட்ட பொது அறிவிப்பில், ” நீச்சல் குளம்/ சுரங்க திட்டங்கள்/ உள்கட்டமைப்பு/ மொத்த தண்ணீர் சப்ளையர்கள்/ நகர்ப்புற பகுதிகளில் அரசு தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள்/ குரூப் ஹவுசிங் சொசைட்டிகள்/ குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களுக்கான குடிநீர் & வீட்டுப் பயன்பாடு உள்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு,

தற்போதுள்ள அல்லது புதிய மேற்கொண்ட எல்லா நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்கள் 30.06.2022க்குள் CGWAலிருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனுமதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 30.06.2022க்குள் பூர்த்தி அடைந்த விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்காக ரூ.10,000 பதிவு கட்டணத்தை செலுத்துவதின் பேரில் 30.06.2022க்குள் தங்களது நிலத்தடி நீர் எடுப்பதைப் பதிவு செய்வதற்கு இதன் மூலம் எல்லா தற்போதைய பயன்பாட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. CGWAலிருந்து NOC பெறாமல் நிலத்தடி நீரைத் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

CGWA பொது அறிவிப்பில், ” குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களுக்கான குடிநீர் & வீட்டுப் பயன்பாடு ” என்றேக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அப்பார்ட்மெண்ட்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் வீட்டுப் பயன்பாடு போன்றவற்றிக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரைக் குறிக்கிறது. இந்த அறிவிப்பில் சாதாரண தனிப்பட்ட வீடுகள் குறித்து நேரடியாக குறிப்பிடவில்லை.

மேலும், CGWA இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்கள் அனுமதிப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளனர். எனினும், மற்ற அனைத்து நிபந்தனைகளும் மாற்றவிலை என இடம்பெற்றுள்ளது.

CGWA இணையதளத்தில் கிடைத்த நிலத்தடி நீரை எடுப்பதற்காக தடையில்லா சான்றிதழ்(NOC) வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்(2017) ஆவணத்தில், ” ஒன்றுக்கு மேற்பட்ட குழாய் கிணறு/ ஆழ்துளை கிணறு அல்லது வளாகத்தில் உள்ள ஒன்றை குழாய் கிணறு/ ஆழ்துளைக் கிணறில் இருந்து 2 எச்.பிக்கு(Horse power) மேல் பம்ப் மூலம் நிலத்தடி நீரை எடுக்கும் தனிப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே இந்த பிரிவின் கீழ் NOC விண்ணபிக்க வேண்டும். மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக “இடம்பெற்றுள்ளது.

இதையெல்லாம் தவிர, ” பின்வரும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில், மாநில நிலத்தடி நீர் ஆணையம் அல்லது அரசு ஆணைகள் மூலம் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை ஒழுங்குப்படுத்தப்ப்படுகிறது. இந்த மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நிலத்தடி நீர் எடுக்க CGWA ஆனது NOC வழங்கவில்லை” என CGWA ஆல் ஒழுங்குப்படுத்தப்படாத மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்று இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் எடுக்க NOC போன்ற விவகாரங்கள் மாநில அரசின் ஆணைப்படியே மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், செய்தித்தாளில் வெளியான பொது அறிவிப்பு ஆனது நிலத்தடி நீர் ஆணையம் இல்லாத 20 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே, CGWA ஆல் ஒழுங்குப்படுத்தப்படாத மாநிலங்களுக்கு இல்லை என CGWA தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது.

முடிவு :

நம் தேடலில், சாதாரண வீடுகளில் கிணறு மற்றும் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதற்கு ஜல்சக்தி அமைச்சகம் ரூ.10,000 கட்டணம் விதிப்பதாக எனப் பரப்பப்படும் தகவல் ஆனது CGWA வெளியிட்ட பொது அறிவிப்பை தவறாகப் புரிந்து கொண்டதால் பரப்பப்பட்டு வருகிறது. அந்த அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என அறிய முடிகிறது.

Post a Comment

أحدث أقدم