சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர் 14ம் தேதி முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வு முடிகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, விடைத்தாள் நகல்கள் கேட்டும், மறு கூட்டல்,செய்யவும் பல மாணவர்கள் தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து விடைத்தாள் நகல்களை தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியர் 14ம் தேதி மதியம் 12 மணி முதல் www. dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட இணைய தள முகவரியில் அதற்கான பக்கத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 15ம் தேதி 12 மணி முதல் 19ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மேற்கண்ட அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505, மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.
إرسال تعليق