தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதன்படி விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 28,984 பேர் மட்டுமே என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளதால் அதற்கு தகுந்தாற் போல் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வருடம் அரசு பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை உள்ளதால் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் தெரிவித்தபடி முதலில் 9,400 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக இருந்தது. இதன் பின் இது 10,300 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள சூழலில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
Post a Comment