டெல்லி: இளங்கலை நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கான தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
நீட் தேர்வு விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. நீட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கு மே 6 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு தேர்வு நேரம் 3 மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு தமிழ்நாடு மாணவர்களை மட்டுமின்றி மற்ற மாநில மாணவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
நீட் தேர்வு கட்டணம் உயர்வு
தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தியது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600-ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400 ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது.
எந்தெந்த நகரங்களில் தேர்வு?
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வெழுதப்போகும் நகரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்தியாவிலும் வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. அதேநேரம் இடம் ஒதுக்கீடு ஆணையையும், நுழைவுச்சீட்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
எப்படி பார்ப்பது?
neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று 'Advance Intimation of Examination City for NEET(UG)-2022' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீட் விண்ணப்ப எண், பிறந்தநாள் மற்றும் பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும். அதை தொடர்ந்து நீங்கள் தேர்வெழுதப்போகும் மையங்கள் குறித்த விபரங்களை அறியலாம். இதனை தரவிறக்கம் செய்துகொள்வது நல்லது. விரைவில் ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment