அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் குவிந்தனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பங்களை திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை வழங்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதில், வேலூா் மாவட்டத்தில் 78 இடைநிலை ஆசிரியா்கள், 328 பட்டதாரி ஆசிரியா்கள், 60 முதுகலை ஆசிரியா்கள் என மொத்தம் 466 காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி, வேலுாா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பி பிளாக் 3-ஆவது மாடியில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான திங்கள்கிழமை இடைநிலை ஆசிரியருக்கு 88 போ, பட்டதாரி ஆசிரியருக்கு 213 போ, முதுகலை ஆசிரியருக்கு 100 போ என மொத்தம் 401 போ தங்களின் விண்ணப்பங்களை வழங்கினா். 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கானோா் தங்களின் விண்ணப்பங்களுடன் குவிந்தனா்.
தொடா்ந்து, இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், முதுகலை ஆசிரியா் என தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
புதன்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், அதன்பிறகே மொத்தம் எவ்வளவு போ விண்ணப்பித்துள்ளனா் என்றும் தெரிவிக்கப்படும்.
அதன்பிறகு, தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் தொடா்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
إرسال تعليق