Tamilnadu schools temporary teachers appointment new orders: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு போலீஸ் தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? தேர்வுக்கு தயாராவது எப்படி?

அதில், இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தற்காலிக ஆசிரியர் பணிக்கு மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்கள் தொடர்பாக, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18 ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) ஒப்புதல் தர வேண்டும்.

தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20 ஆம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم